தூத்துக்குடி:

பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து, வரும் 5ந்தேதி தெரிவிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும், நிலையில், இன்று தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் தேர்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சரத்குமார், நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா? கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் தேமுகவை இழுக்க திமுக, அதிமுக கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றவர்,  பா.ஜனதாவை பொருத்த வரையில் தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது என்று கூறினார்.

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை பொருத்த வரையில் நிலைப்பாடு எடுத்தால் தெளிவாக எடுக்க வேண்டும். அரசியலில் விமர்சிக்கலாம். ஆனால் கீழ்த்தரமாக திட்டிவிட்டு எப்படி அருகில் உட்காருகிறார்கள் என்று தெரியவில்லை என்னால் அப்படி இருக்க முடியாது என்றார்.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ரூ.30 கோடி, ரூ.40 கோடி தேவை என்கிற என்ற அச்சம் மக்களிடையே உள்ளது என்று கூறியவர், மக்களுக்கு  சேவை செய்யும் நபர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுப்போம் என்ற நிலை எப்போது வருகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் என்றவர், தான்  பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.