சென்னை:

பிரபல ஓட்டலான சரவணபவன் ஓட்டலில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பிஎஃப் மற்றும் ஈஎஸ்ஐ பணம் செலுத்தாதது தொடர்பாக அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

ஊழியர்களின் பணம் சுமார் 20 கோடி அளவில் செலுத்தாமல் சரவணபவன் நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து,  சரவணபவன் நிறுவனத்திடம் அதிகாரிகள்  விசாரணை நடத்தியுள்ளனர்.

சரவண பவன் நிறுவனரான ராஜகோபால் உடல்நலமில்லாமல் கடந்த ஜூலை 18ம் தேதி மரணம் அடைந்தார். அவர் நோய்வாய் படுத்ததில் இருந்தே, அந்த நிறுவனம் நிர்வாகம் சரியின்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக விற்பனை சரிவை எதிர்கொண்டுள்ள சரவணபவன் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது.

இந்த நிலையில், அங்கு வேலை செய்து வரும் ஊழியர்களின் சம்பளமும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே வேலையில் இருந்து விலகிச்சென்ற ஊழியர்களின் பிஎப் பணம் பட்டாவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, ஊழியர்களின் பிஎப் பணம் செலுத்தா மல் பல ஆண்டுகளாக சரவணபவன் நிர்வாகம் இழுத்தடித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது சுமார் ரூ.20 கோடி அளவில் பாக்கி வைத்துள்ளதாக பிஎஃப் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இன்று சரவணபவன் நிறுவனத்துக்கு வந்த வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள், நிறுவனத்தின் பொறுப்பாளர்களுடன் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.