ஒரு அணையின் தண்ணீரால் கண்ணீரில் மிதக்கும் கிராமங்கள்! நிவாரண முகாம்களில் பட்டினி கிடக்கும் அவலம்!

போபால்: சர்தார் சரோவர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் வீடுகளை இழந்து முகாம்களில் இருக்கும் மக்கள், போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ளது நிசார்புர் என்ற கிராமம். அம்மாநிலத்தில் கட்டப்பட்டது தான் உலகின் 2வது பெரிய அணையான சர்தார் சரோவர் அணை. அதில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிட்டபடியால், அணைப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.


இதையடுத்து, அந்த ஊரில் இருந்த 400 குடும்பங்கள், அங்குள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தேவையான,உணவு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நர்மதா ஆற்றங்கரை பகுதியில் வசித்து வந்தவர் கஞ்சன் பாய். வயது 60. நிவாரண முகாமில் தற்போது தங்கி இருக்கிறார். ஆனால் முகாமில் உள்ளவர்களுக்கு 12 நாட்களாக எந்த உணவும் வழங்கப்படவில்லை.
நிவாரண முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு அறை. ஒரு சின்ன ஜன்னல், ஒரு காற்றாடி என்ற வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.


போதிய கழிப்பறைகள் இல்லாததது, அப்படியே இருந்தாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. குப்பை தொட்டிகள் இல்லை, வீடுகளுக்கு வெளியே திறந்தவெளி பகுதிகளில் அவை கொட்டப்படுகின்றன. சுகாதாரம் இல்லாததால், கொசுக்களுக்கு கொண்டாட்டமாகி விட, மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு நர்மதா அணை பாதுகாப்பு குழுவினர், நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புவாசிகளுக்கு மூன்று வேளை உணவு, சாதம், காய்கறி வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும்.

ஆனால், இப்போது மீண்டும் புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோர கால தாமதம் ஆவதால், சரியான நேரத்துக்கு முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பது இல்லை. கூரைகளுக்கான வாடகை காலம் முடிந்தவிட்ட படியால், இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வினியோகம் இல்லை என்பதை தார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பானேட் மறுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: அக்டோபர் 15 வரை தான் அவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு கூடுதலாக அந்த மாதம் இறுதி வரை வழங்கப்பட்டது.


இந்த விவகாரம் குறித்து, நர்மதா அணை பாதுகாப்புக்குழுவினரிடம் தெரிவித்து இருக்கிறோம். காரணம், அவர்கள் தான் இதில் முடிவெடுக்க வேண்டும். அந்த உத்தரவு வரும் வரை நாங்கள் உணவளிக்க முடியாது என்றார்.
இது குறித்து நர்மதான பச்சாவ் அந்தோலன் அமைப்பின் ராகுல் யாதவ் கூறி இருப்பதாவது: பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்ன கொடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதை முழுமையாக அளிக்காத வரை, அவர்கள் இங்கிருந்து வெளியேற போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.