காந்திநகர்:

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பிரபல சமூக சேவகி மேதா பட்கர் 9 நாட்களுக்குப்  பிறகு இன்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார் .

சர்தார் சரோவர் அணையின்   நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் மற்ற அணைகளில் இருந்து நீர்திறப்பு காரணங்களாலும் சரோவர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 138.68 மீட்டரில்  134 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட குஜராத் மாநில அரசு அறிவித்தது. இதனால் நர்மதா ஆறு பாயும் அண்டை மாநிலமான மத்திய பிரதேச மாநில எல்லையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பர்வானி மாவட்டத்திலுள்ள 21 கிராமங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.‘

இந்த நிலையில், குஜராத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சர்வர் அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதாபட்கர் கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டம் சோட்டா பாத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

மேதா பட்கருக்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட் டத்தில் குதித்தனர். அவரது போராட்டம் நேற்று 9வது நாளாக நீடித்த நிலையில், மேதாபட்கரின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள்  தலையிட்டு, மேதாபட்கரின்  உயிரை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது..

இந்த நிலையில் நேற்று இரவு மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் சார்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.சி.பெகர், மேதா பட்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் சமூக ஆர்வலர் ராஜேந்திர கோத்தாரியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவ தாக பெகர் கூறினார். இந்த உத்தரவாதத்தை அடுத்து மேதா பட்கர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

மேதா பட்கருக்கு எஸ்.சி.பெகர் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். மேதா பட்கருடன் உண்ணாவிரதம் இருந்த அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.