“சரிப்பா” – சிறுகதை

 

சரிப்பா

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

இனி இந்த வீட்டின் பக்கம் வரக்கூடாது, என தன் தாயின் போட்டோவைப் பார்த்து வணங்கி விட்டு வந்தான் ஈஸ்வர்.

கிளம்பிச் செல்லும் முன்பாக தன் தங்கை மதியிடம் மட்டும் எழுப்பி சொல்லி விட்டு சென்றான், தந்தை அன்பழகன் பக்கம் திரும்பவில்லை.

சேலத்தின் புதிய பேருந்து நிலையம் கூட சென்றிருக்க மாட்டான், அவர்கள் கடையின் பரோட்டா மாஸ்டர் இவனிடம் வந்தார், “தம்பி, எறங்கி வாப்பா, உங்க அப்பாவுக்கு மாரடைப்பு” என்று பதறினார்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபிக்கும் வகையில் வேகமாக, மருத்துவமனை நோக்கி பயணித்தான்.

இப்ப உங்க அப்பாவைப் பார்க்க முடியாது என செவிலியர் வந்துக் கூறவும் தங்கையைத் தேற்றியவாறே வராண்டாவில் அமர்ந்தான்.

அன்பழகன், ஈஸ்வர் அம்மா ராணியின் இரண்டாவது கணவர், ஈஸ்வரின் தந்தை இவன் சிறு குழந்தையாக இருக்கும் போதே ராணியை விட்டு வேறு பெண்ணுடன் ஓடி விட்டார். பின் ராணியின் தந்தை, அதாவது ஈஸ்வரின் தாத்தா அன்பழகனை ராணிக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர்களுடையக் குழந்தைதான் ஈஸ்வரின் தங்கை மதி.

சிறு வயதில் அவர்தான் தந்தை என நினைத்தான், நாட்கள் செல்ல செல்ல அன்பழகனின் கண்டிப்பு இவனுக்குப் பிடிக்கவில்லை, தன் உண்மையானத் தகப்பனாக இருந்தால் இவ்வாறு செய்வாரா, கண்டிப்பாரா ? என எண்ணி அவரிடமிருந்து விலகினான்.

பாவம் இவர்கள் இருவருக்குமிடையில் ராணிதான் கிடந்து தவித்தாள். மதி கல்லூரி சேர்ந்து இப்போது தான் ஒரு வருடமாகிறது, ஒரு மாதத்திற்கு முன்பு தான் ராணி நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள். ஈஸ்வர் கல்லூரி முடித்து விட்டு பெங்களூருவில் வேலை செய்தான், எப்போதாவது அம்மைவாயும், தங்கையையும் பார்க்க வருவான், சிறிய அளவில் டிபன் கடை வைத்து நடத்தும் அன்பழகன், அதிகமாக வீட்டில் இருக்க மாட்டார், அப்படியே இருந்தாலும் அவரைப் பார்ப்பதை ஈஸ்வர் தவிர்த்து விடுவான்.

அன்பழகனின் தூரத்து சொந்தத்தில் இருந்து ஒரு பெண் பார்த்தார்கள் ராணி, பெண்ணை படிக்கும்போதே ஈஸ்வருக்குத் தெரியும், நல்ல அழகான, குணமான பெண் என மனசு சொன்னாலும், அன்பழகனின் உறவு என்ற ஒரே காரணத்திற்காக திருமணம் இப்போது வேண்டாம் என கடந்த ஒரு வருடமாக அம்மா ராணியிடம் சொல்லி வந்தான், ஆனால் இவ்வளவு சீக்கிரம் அம்மா இறப்பது தெரிந்திருந்தால், திருமணத்திற்கு “சரிம்மா” என்று சொல்லி இருக்கலாமே, என நினைத்து வருந்தினான் ஈஸ்வர்.

சரி அம்மாதான் போயிட்டாங்க, எனக்கும் என் தங்கைக்கும் இனி ஒரே ஆதரவு இவர்தானே, இவருக்கும் ஏதாவது ஆகிவிட்டாள் என்ன செய்வது ? என கிடந்து தவித்தான் ஈஸ்வர்.

அன்பழகன் அவ்வப்போது ஜாடைமாடையாகப் பேசினாலும் ஈஸ்வர் அவரிடம் முகம் கொடுத்துப் பேச மாட்டான், அதை எண்ணியும் இப்போது கலங்கினான்.

“சார், நீங்களும் உங்க தங்கையும் போய் பாருங்க, அவர்க்கிட்ட உணர்ச்சிகரமாக எதுவும் பேசாதீங்க” என செவிலியர் கூறினார்.

இந்த இரண்டு நாட்களில் அப்பா மிகவும் சோர்வாகக் காணப்பட்டார்.

தங்கை மதியையும், இவனையும் பார்த்து கண்ணீர் விட்டார் அன்பழகன்.

அருகில் சென்று தங்கை பேசினாள், இவனுக்கு சென்று பேச வேண்டும் போல இருந்தது, ஆனால் ஏதோ தடுத்தது.

அருகில் சென்றவன் தலையணையை அவருக்கு சரியாக வைத்தான்,

“தண்ணிக் குடு மதி”, என்றவுடன் ஓடிச்சென்று ஈஸ்வர் அவருக்கு குடிக்கக் கொடுத்தான்.

“மதி நீயும் அண்ணனும் ரெண்டு நாளா இங்க இருக்கிங்க, போங்க வீட்டுக்குப் போயி குளிச்சிட்டு வாங்க, எனக்கு ஒண்ணுமில்லை நான் நல்லாதான் இருக்கேன்” என்றார்.

உடன் தங்கையைக் கூட்டிச்சென்று குளித்து முடித்துவிட்டு,

“மதி, நான் அப்பாவைப் பார்த்துக்கிறேன், நீ வீட்டில் பத்திரமாக இரு” என சொல்லிவிட்டு கிளம்பினான்.

இவன் அவரின் அறைக்குச் செல்லும்போது குடும்ப நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் தந்தை, வெளியே  நின்று கேட்டான் ஈஸ்வர்.

“இந்த டிபன் கடை சின்னதா இருந்தாலும் மெயின் ரோட்டில் இருக்கு பக்கத்திலயும் இடம் கிடக்கு, அதனால் அதையும் இரண்டு பிள்ளைகளின் பேரில் சரிசமமா எழுதணும், நாளைக்கே எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, என் பிள்ளைகள் தடுமாறக்கூடாது,” என்றார் அன்பழகன்.

“இல்ல அன்பழகா, இந்த டிபன் கடை நீ சம்பாரிச்சது அதான் இரண்டு பாகமான்னு யோசித்தேன்” என்றார் நண்பர்.

“இருந்தாலென்ன, அவனும் என் பையன்தான், அப்புறம் வீடு அவன் பெயருக்கும், நகை எல்லாம் மதிக்கும் கொடுத்திடணும், இரண்டின் மதிப்பும் சரியாக இருக்கும். வங்கியில் இருக்கிற பணமும், இன்னும் சில மனைகளும் சரியா எழுதணும், நாளைக்கு காலைல உயில் எழுத ஏற்பாடு பண்ணுப்பா” என்றார் அன்பழகன்.

“சரி வரேன்”, என வந்தவர் சென்று விட்டார்.

ஈஸ்வர் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதுவும் பேசாமல் அவருக்கு கொண்டு வந்த பழ ரசத்தை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தான், அமைதி நிலவியது.

“ஈஸ்வர், எனக்கு ஒரு ஆசை செய்வாயா ?” என்றார்,

பல வருடங்களுக்குப் பிறகு “சொல்லுங்க” என்றான்.

“நீ கல்யாணம் பண்ணிக்கணும், நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணுனா நீயும் மதியும் ஆதரவில்லாமப் போய்டுவிங்க, நம்ப சொந்தம் எதுவும் வேண்டாம்பா, தரகர்க்கிட்ட போறேன் படிச்ச பொண்ணாப் பார்க்க சொல்றேன், கல்யாணம் பண்ணிக்கிறியாப்பா” என்றார், அன்பழகன்

மெதுவாகத் தலையாட்டிவிட்டு “சரிப்பா” என்றான்.

“ஆனால், உங்களுக்கு உடம்பு சரியாகட்டும், அதுவுமில்லாம உங்க சொந்தத்தில் பாருங்கப்பா” என்றான்.

அன்பழகன் முகம் மலர்ந்தது, “ரொம்ப சந்தோஷம் கண்ணு” என்றார்.

பின் “அப்பா.., அம்மாதான் எங்களைவிட்டுப் போயிட்டாங்க, எனக்கும் மதிக்கும் நீங்க வேணும்ப்பா, நான் இதுவரை உங்களை கஷ்டப்படுத்தி இருக்கேன், மன்னிச்சிடுங்கப்பா” என்று அமைதியாகக் கூறினான்.

“விடுப்பா, இதெல்லாம் அப்பா, பிள்ளைக்குள்ள சகஜம்” என்றார் சிரித்தவாறே.

“நான் பெங்களூரு போகலப்பா, இங்கேயே நம்ப டிபன் கடையில அத விட அதிகமாக சம்பாதிக்கலாம்பா, உங்களுக்கு உதவியா, மதிக்கு பாதுகாப்பா இருக்கம்பா” என்றான்.

“ம், சரி உன் முடிவு எதுவோ அதுதான் என் முடிவும் கண்ணு சரியா ?” என்றார்.

“சரிப்பா” என்றான் ஈஸ்வர், அங்கே ஒரு புதிய உறவுப் பூ பூத்தது, அந்தப் பூ அன்பின் பூ.