கோவை:

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், தொழிலதிபருமான  சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கோவை வடவள்ளியில்  காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்வதாக, கேரளாவின் முன்னாள் நடிகை சரிதா நாயர் தனது கணவருடன் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார்.  அவரது நிறுவனம் மூலம் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபர் தியாகராஜன், தொண்டு நிறுவன தலைவர் மற்றும் சிலரிடம் பல லட்சம் பணம் பெற்று, மோசடி செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக  நடிகை சரிதா நாயர் அவரது கணவர், பிஜு ராதாகிருஷ்ணன்,  நிறுவன மேலாளர் ரவி ஆகியோர் மீது கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது.  தீர்ப்பில்,  நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், மானே4ர் ரவி ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.