சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: சர்க்கார் மறு தணிக்கை நிறைவுபெற்றது

சென்னை:

ர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, சர்கார் படத்திற்கு மறு தணிக்கை நிறைவு பெற்று விட்டதாகவும், அதற்கான சான்றிதழை படத்தயாரிப்பு நிறுனம் வாங்கி சென்றுள்ளதாக மண்டல தணிக்கை குழு  அறிவித்து உள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படம் கடந்த 6ந்தேதி தீபாவளி அன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் அதிமுக ஆசூட்சியின்போது வழங்கப்பட்ட இலவச பொருட்களான  மிக்சி கிரைண்டர்கள் போன்றவற்றை உடைத்து தீயிட்டு கொளுத்துவதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது.

இதற்கு அதிமுகவினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சர்க்கார் ஓடும் தியேட்டர்களில் புகுந்து அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.  தியேட்டர்களில் போராட்டம் நடை பெற்றதால், பாதுகாப்பு கருதி பல தியேட்டர்கள் படங்களை திரையிட மறுத்து உள்ளது.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் சர்க்கார் ஓடிக்கொண்டிருந்த பல தியேட்டர்களில் இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் மற்றும  நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டது.

சர்க்கார் மறு தணிக்கை சான்றிதழ்

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கும் பணி மண்டல தணிக்கை குழுவில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி  நடைபெற்றது.    இதை தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர்  உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சர்கார் படத்திற்கு மறு தணிக்கை நிறைவு பெற்றதாகவும்,  சான்றிதழை தயாரிப்பு நிறுவனம் வாங்கி சென்றது என்றும் மண்டல தணிக்கை குழு அறிவித்து உள்ளது.

மறு தணிக்கையின்போது,  சர்க்கார் படத்தில், முருகதாஸ் மிக்ஸி, கிரைண்டரை தூக்கி தீயில் போடும் காட்சி முழுக்கவே நீக்கப்பட்டதாகவும்,  “கோமளவல்லி” என்கிற பெயரில் “கோமள” என்கிற பகுதி மட்டுமே நீக்கப்பட்டு உள்ளது. “வள்ளி” என்கிற பெயர் அப்படியேதான் இருக்கும் வகையில் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை” என்று சொல்லும் வசனமும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர் லீலா மீனாட்சி மறுதணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று பிற்பகல் காட்சிகள் முதல் சர்க்கார்  படம்  மீண்டும் திரையிடப்படுகிறது.