சர்க்கார் சர்ச்சை: விஜய் ஏன் வாய் திறக்கவில்லை? திமுக கேள்வி

சென்னை:

ர்க்கார் படம் தொடர்பாக இவ்வளவு பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும்போது படத்தில் நடித்து வீராவேசமாக வசனம் பேசிய நடிகர் விஜய் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் கேள்வி விடுத்துள்ளார்.

‘சர்கார்’ திரைப்படத்தில் அதிமுக அரசின் இலவசங்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அதிமுகவினர் கொதித் தெழுந்து தியேட்டர்களை சூறையாடினர். இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அதிமுக எதிர்ப்பு காரணமாக  திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சர்ச்சை குறித்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் போன்றோர் டிவிட்டர் பக்கத்தில் குரல் கொடுத்த நிலையில், படத்தில் நடித்த நடிகர் விஜய் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் தலைமறை வானார்.

இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்க்கார் பிரச்சினை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், சென்னை தி.நகர் தொகுதி . திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விஜயின் மவுனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘விஜய்யின் மவுனம் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றவர், விஜய் வேண்டுமென்றே புரமோஷனுக்காக பிரச்சனையை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவது போல் தெரிகிறது. இல்லையென்றால் இந்நேரம் விஜய் கொந்தளித்து இருந்திருக்க வேண்டாமா?  என்று கேட்டு உள்ளார்.

அன்பழகன் எம்எல்ஏவின் கேள்வி திமுக சார்பில் நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்ட கேள்வி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.