சட்டத்தை மீறி வசூல் சாதனை நிகழ்த்திய “சர்கார் “

--

சட்டத்தின் மூலம் மக்களுக்கு உள்ள உரிமையை சட்ட போராட்டம் மூலம் மீட்டெடுத்து, ஊழலுக்கு எதிராக போராடும் கதையம்சம்  கொண்டு தயாரான படம் சர்கார்.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தை முருகதாஸ் இயக்க A.R.ரஹ்மான் இசையில்சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்க்கார்தீபாவளி அன்று ரீலீஸ் ஆனது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த எந்திரன் 2010ல் வெளியானபோது தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது.

போட்டிக்கு எந்த பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் வெளிவராத காரணத்தால் தியேட்டர்கள் எந்திரன் படத்தை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,

அதே சூழலை சன் பிக்சர்ஸ் இவ் ஆண்டு தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு ஏற்படுத்தி வெற்றி கண்டது.

தமிழகத்தில் 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்த சர்கார் 600 திரைகள் வரை திரையிடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு புதுப் படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களால் ” சர்கார் ” படத்தை கடந்து வேறுபடம் பார்க்கும் சூழலை உருவாக்க விடவில்லைசன் பிக்சர்ஸ்.

பிரம்மாண்டமான விளம்பாங்கள், படத்திற்கு எதிரான ஆளும் அதிமுகவின் போராட்டம் இவை அனைத்தும் ” சர்கார் ” படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற மனநிலையை பொது மக்களிடம்உருவாக்கியது.

முதல் நாள் மட்டுமல்ல நேற்று வரை சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே தியேட்டர்களில் டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

படத்திற்கு ஆதரவாக எதிராக பேசியவர்கள் கட்டண கொள்ளையை பற்றி பேசவில்லை. உலகம் முழுமையும் சர்கார் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அதற்கு பின் உள்ள சட்ட மீறலை, கட்டண கொள்ளையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் சர்கார் தீபாவளி அன்று 31கோடியும் இரண்டாம் நாள் 22கோடியும் மூன்றாம் நாள் 10 கோடியும் நான்காம் நாள் 9  கோடியும் ஐந்தாம் நாள் 9.80 கோடியும் 6ம் நாள் 12 கோடியும் 7ம் நாள் 13 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்.

தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வசூல் விபரங்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகம் தவிர்த்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் சர்கார் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் சினிமா  வரலாற்றில் ரஜினிகாந்த், விஜய் நடித்த படங்களின் முந்தைய சாதனைகளை சர்கார் வசூல் முறியடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது.

இப்படத்தின் வியாபாரம், அதிக திரைகளில் திரையிடும் சூழலை உருவாக்கிபிற படங்களை ஓரங்கட்டியது, டிக்கட் விற்பனையில் விதிமீறல் இவை அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு மோசமான விளைவுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

சிறு பட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்ட நடிகர்களையும் தொழில் செய்ய முடியாத சூழலை உருவாக்கும். குறிப்பிட்ட சில நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்தால் போதும் என்ற நிலைமைக்கு தயாரிப்பாளர்கள் ஆளாக நேரிடலாம்.

– ஸ்பெஷல் சினிபார்வை: சினி ராம்