‘சர்க்கார்’ சர்ச்சை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை

சென்னை:

ர்க்கார் பட சர்ச்சை காரணமாக  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27ந்தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்க்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்தும், அரசின் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தை கடுமையாக  விமர்சித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று  பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அதிமுகவினர் பல இடங்களில் சர்க்கார் படம் ஓடும் தியேட்டர்களில் புகுந்து போராட்டம் நடத்தி  படத்தை நிறுத்தினர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி தியேட்டர் அதிபர்கள் படத்தை பாதியிலேயே நிறுத்தினர்.

இந்த நிலையில், தமிழக அரசை அவமதித்ததாக கூறி, ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில்  நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். மேலும், நேற்று நள்ளிரவு காவல்துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டை திடீரென முற்றுகையிட்டனர்.

இதனால் தலைமறைவான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி,சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி அவசர  மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, படத்தயாரிப்பாளர் சார்பில், இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்;பபடும் என்றும்,  கோமளவல்லியில், கோமள என்ற சொல் ம்யூட் செய்யப்படும் என்றும்,  கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரி ம்யூட் செய்யப்படும். என்றும் உறுதி அளித்தது.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது,  ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அப்பேது குறுக்கிட்ட நீதிபதி, படத்தில் மிக்‌சி, கிரைன்டர் எரித்ததுதான் பிரச்சனையா? டிவியை எரித்தால் திருப்தியா? என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகு எதிர்ப்பு ஏன்? என்றும்,  சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை வரும் 27ந்தேதி வரை  கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதிப்பதாக கூறி வழக்கை  ஒத்தி வைத்தார்.