‘சர்கார்’ விவகாரம்;   நியாயத்துக்காக நின்றேன்: பாக்யராஜ்  

ர்கார்’ பட விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நின்றேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இயக்குநரும் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘திரைத்துறையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வருவது வழக்கமான ஒன்றுதான். தென்னிந்திய திரைக்கதையாசிரியர்கள் சங்கத்தில் முருகதாஸ், வருண் ராஜேந்திரன் இருவரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுக்குள் கதை சம்பந்தமாக சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கள்ள ஓட்டு போடும் அநீதியை எதிர்த்துப் போராடும் கதாநாயகன் என்ற கருவை வைத்து சர்காரை முருகதாஸ் உருவாக்கியுள்ளார். வருண் ராஜேந்திரன் பத்து வருடங்களாக திரைத்துறையில் இணை இயக்குநராக இருப்பவர்.  செய்தித்தாள் சர்கார் கதை பற்றி அறிந்து சங்கத்தில் தொடர்பு கொண்டார்.

நான் முருகதாஸிடம் முடிந்தவரையில் நீதிமன்றத்துக்கு வெளியே இருதரப்புக்கும் மனக்கசப்பு இல்லாமல் பிரச்சினையைத் தீர்க்க முயன்றேன். ஆனால் முருகதாஸுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர்,  “நான் மிகவும் சிரமப்பட்டு கதையை உருவாக்கி, திரைக்கதை அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன்.  திடீரென ஒருவர் வந்து தனது கதை என்றால் என்ன அர்த்தம்” என்று ஒரு படைப்பாளியாக அவர் வருத்தப்பட்டார்.

இதே கருவை 10 வருடங்களுக்கு  முன் சிந்தித்து வருண் ராஜேந்திரன் சிந்தித்து எழுதியுள்ளார். அதைக் கொஞ்சம் பரிசீலியுங்கள் நான் சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் என்று முருகதாஸிடம் தெரிவித்தேன். இல்லை சார் தப்பா பேசுவாங்க என்று முருகதாஸ் கூறினார்.

அதன்பின்னர் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவரும் 10 வருடங்களாக திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று சிரமப்பட்டு போராடி வருகிறார்.  அவரும் உங்களைப்போலவே கள்ள ஓட்டு குறித்த கதைக் கருவை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார். இரண்டு கதைகளின் கருவும் ஒன்றாக இருப்பதால் நீங்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும். நீங்கள் வளர்ந்த இயக்குநர், அவர் வளர்ந்துவரும் இயக்குநர். அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்

இந்த விசயத்துக்காக நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல வேண்டுமா என்று கேட்டிருந்தேன். ஆகவே ஏ.ஆர்.முருகதாஸ், “ நீங்கள் இந்த அளவு கூறுகிறீர்கள். அவரும் பத்தாண்டுகள் சினிமா துறையில் உரிய அங்கீகாரம் வேண்டி  போராடுகிறார். தவிர கரு அவருடையதும் என்பதாலும் நான் சர்கார்  பட டைட்டிலில் அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கிறேன்” என முருகதாஸ் தெரிவித்தார். அதனால் பிரச்சினை சுமுகமாக முடிந்தது.

விஜய்க்கு என் மகன் விசிறி. ஆனால் இந்த விசயத்தில் அவருக்கு நான் எதிர்ப்பாக நிற்க வேண்டி இருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வருண் ராஜேந்திரன். அவரும் எதிர்ப்பாக நிற்க நேர்ந்தது. ஆனால், பிரச்சினை சுமுகமாக முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் நியாயத்தின் பக்கம் நான் நின்றேன்”. என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.