‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: இயக்குநர் சாகும்வரை உண்ணாவிரதம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் தனது குடும்பத்துடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தார். மேலும், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் வருடம் இயக்கினேன். அதனை முறையாக பதிவும் செய்துள்ளேன்.
இந்த நிலையில் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனக்கு உதவி இயக்குநர் தேவைப்படுவதாக ட்விட்டர் இணையதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைவைத்து, விஜய் நடிப்பில் கத்தி என்கிற திரைப்படமாக எடுத்துவிட்டார்.

எனது கதையை அனுமதி இன்றி, எனது பெயரையும் இருட்டடிப்பு செய்தது குறித்து ஏ.ஆர். முருகதாஸுக்கு எதிராக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். கடந்த நான்கு வருடங்களாக போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன். நடிகர் சங்க தலைவர் விஷாலைச் சந்தித்தும் நியாயம் கிடைக்கவில்லை. ஆகே முருகதாஸ் இயக்கி வெளிவர இருக்கும் ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று புகார் அளித்தேன். இதை வலியுறுத்தி இன்று குடும்பத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். இனி நான் வீட்டுக்குச் சென்றாலும் என் மனதிற்கு துரோகம் செய்யாமல் தண்ணீர், உணவு அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். படைப்பாளிகளை ஏமாற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் சர்கார் படம் வெளியாக கூடாது என்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” என்று தெரிவித்தார்.