“சர்கார்” கதைத்திருட்டு பிரச்சினை பேசி முடிக்கப்பட்டது! தீபாவளிக்கு படம் வெளியாகும்!

ர்கார் கதை விவகாரம் தொடர்பாக மனுதாரர் வருணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்

சர்கார் படத்துக்கு தடை கோரி வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அம்மனுவில், சர்கார் படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடை செங்கோல் என்ற கதையதான்.  தனது செங்கோல் கதையை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கதை திருடப்பட்டுள்ளது என்பதால்  சர்கார்  படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், மற்றும்தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் ஆகியவை அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டிருக்கிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் சர்க்கார் பட கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் முருகதாஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் கதை தொடர்பாக வழக்குத் தொடர்ந்த வருண் என்கின்ற ராஜேந்திரனுக்கு சமரசம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமரசம் குறித்து மனுதாரர் வருண் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த பிறகு, வழக்கு முடித்து வைக்கப்படும் என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் பட டைட்டிலல் வருண் ராஜேந்திரன் பெயர் சேர்க்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து எந்தவித தடங்கலும் இன்றி தீபாவளிக்கு சர்கார்  வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.