தீபாவளி அன்று ‘சர்கார்’ பட சிறப்பு காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

டிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக தடை விதித்துஉள்ளது.

இது படத்தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது, திரையரங்குகளில்  படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்ப சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. நடிகர் விஜய் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் சர்க்கார் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த படம் நீக்கப்பட்டது. பின்னர், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது விஜய் மேதாவித்தனமாக பேசி மேலும் சர்ச்சையை உருவாக்கினார்.

அதைத்தொடர்ந்து, சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவரிடம் சமரசம் பேசப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சர்க்கார் படத்தை  தீபாவளி போன்ற  விடுமுறை நாட்களில்கூடுதல் காட்சிகள் திரையரங்கு களில் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்த  சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சர்க்கார் படத்தின் கூடுதல் காட்சிகள் திரையரங்குகளில்  திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.

உயர்நீதி மன்ற தடை குறித்து கூறிய வழக்கு தொடர்ந்த தேவராஜ்,  ‘சர்கார்’ படம் தொடர்பாக உயர்நீதி மன்ற விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும், கூடுதல் காட்சி அனுமதி இன்றி ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம். அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்’ என்று மிரட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.