“சர்கார்” : சட்டங்கள் காப்பாற்றப்படுமா?

--

“சர்கார்” படத்தில் ஏகப்பட்ட சட்டதிட்டங்களைச் சொல்லியிருக்கிறார் விஜய் என்கிறார்கள். ஒரு தேசத்தின் ஆட்சி அமைவது தேர்தல் மூலம்தானே.. தேர்தலுக்கான சட்டதிட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்.. அதோடு லஞ்ச ஊழல் இல்லாமல் அரசு செயல்பட என்ன மாதிரியான சட்டதிட்டங்கள் தேவை என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறாராம் விஜய்.

சரி.. சர்கார் பட வெளியீட்டில் சட்டதிட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும்?

முக்கிய விவகாரம் திரையரங்க கட்டணம்.

பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது முதல் சில நாட்களுக்கு சட்டத்தை மீறி பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது சகஜமாகிவிட்டது.  ரஜினி நடித்த கபாலி படம் வெளியானபோது இது பகிரங்கமாகவே நடந்தது.

விஜய்யும் பெரிய நடிகர்தான்.

ஆனால், சமீபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், “தீபாவளி அன்று வெளியாகும் சர்கார் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. அதில் ஒரு டிக்கெட் ரூ. 500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிப்பது அப்பட்டமான விதிமீறல். இதைத் தடை செய்ய வேண்டும்” என்றார்.

“சர்கார் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி நடக்காமல் படம் வெளியாகும் திரையரங்குகளில் தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும்ட என்று உத்தரவிட்டார்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், “அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். அப்படி முறைகேடு நடந்தால் குறிப்பிட்ட திரையரங்கின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

“ஒரு திரைப்படத்தின் விலையை விநியோகஸ்தர்கள் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது முதல் ஒருவார வசூல்தான். பெரிய ஹீரோ என்பதால் கூடுதல் விலைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதன் அடிப்படையில்தான் ஹீரோவுக்கு சம்பளமும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முதல் ஒரு வாரத்தில் உரிய கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்றால்,  அடிப்படையே ஆட்டம்காணும்” என்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தினர்.

இன்னொரு சட்டரீதியான  விசயம்… புகைப்பிடிக்கும்படியான காட்சிகளை திரையரங்குகளில் வைக்கக் கூடாது என்பது.

ஆனால் படத்தின் நாயகன் விஜய், சிகரெட் பிடிப்பது போல சர்கார் பட ஸ்டில்கள் நிறைய புழக்கத்துக்கு விடப்பட்டுவிட்டன. அதில் ஒன்றை எடுத்து ஆர்வக்கோளாறு ரசிகர் யாராவது திரையங்கில் நிறுத்தி வைத்தால் பிரச்சினைதான்.

ஆகவே முன்னெச்சரிக்கையாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் ரோகிணி ஆர். பன்னீர்செல்வம், “திரையரங்க உரிமையாளர்களின் கவனத்திற்கு” என்று ஒரு சுற்றரிக்கை அனுப்பியிருக்கிறார்.

அதில், “அரசு உத்தரவுப்படி, ‘சர்கார்’ படத்தின் பேனர், போஸ்டர் மற்றும் ஃபோட்டோ கார்டுகளில் புகைப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்.

இதனை அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களும் அவசியம் செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு சட்ட விவகாரத்தைப் பார்ப்போம்…

பட வெளியீடு என்றாலே தயாரிப்பாளர் வயிற்றில் பயத்தை ஏற்படுத்துவது “இணையதள  வெளியீடு”தானே.. அதாவது திருட்டுத்தனமாக படத்தின் காப்பியைக் கைப்பற்றி இணையத்தில் வெளியிடுகிறார்களே..

இதைத் தடுக்க சர்கார் படத்தின் தயாரப்பாளரான சன் பிக்சர்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியது. தற்போது, “சர்கார்திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

எல்லாம் சரிதான்… சர்கார் வெளியாகும் திரையரங்குகளில் உரிய கட்டணம்தான் வசூலிக்கப்படுமா..  புகைப்பிடிக்கும் புகைப்படங்கள் வைக்கப்படாதா…  இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாதா… எல்லாம் சட்டப்படி நடக்குமா?

இதற்கெல்லாம் வரும் நாட்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.