பெங்களூரு,

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,  சிறையில் வசதியாக இருக்க, சிறைதுறை ஐஜி. சத்தியநாராயணவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா பரபரப்பு தகவல்களை கூறினார்.

இதையடுத்து, சிறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். ஐஜி மீது லஞ்சப்புகார் கூறிய, சிறை டிஐஜி ரூபாவும் பெங்களூரு டிராபிக் கமிஷனராக மாற்றப்பட்டர்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் நடைபெற்ற முறைகேடு சார்பாக,  கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் நியாயமாக விசாரணை நடத்தினால் மேலும் பல பரபரப்பான உண்மைகள் வெளி வரும் என்றும் கூறி உள்ள ரூபா, சிறை அதிகாரி சத்ய நாராயணவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து கூறி உள்ளார்.

சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனே இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றும், முன்னாள் கர்நாடக  உள்துறை மந்திரி ஜி. பரமேஸ்வரனின் உதவியாளர், மற்றும் கேஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மக்னுர்,  மற்றும் தரகர்  வி.சி. பிரகாஷ் ஆகியோரின் முன்னிலையில் சிறையில் கிருஷ்ணா குமாருக்கு பணம் கொடுத்ததாகவும், அதை  சிறைத்துறை முன்னாள் டிஜிபி எச்.டி. சத்ய நாராயணாவிடம் கிருஷ்ணா குமார் ஒப்படைத்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்தே சிறை அதிகாரி  கிருஷ்ணகுமார் மூலம்  சசிகலாவை இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  பிரகாஷ் சந்தித்தார், இது டில்லி போலீசாரின் விசாரணையின் காரணமாக தனக்கு தெரிய வந்ததாகவும் கூறி உள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக பணம் கைமாறியது உண்மை என்றும்,   நேர்மையான, நியாயமான, முழுமையான விசாரணை நடந்தால் உண்மை வெளியே வரும் என்றும் விசாரணை கமிஷன் என்னிடம் விசாரணை நடத்தினால்,  சரியான நேரத்தில் அதற்கான ஆவணங்களை வழங்குவேன் என்று கூறி உள்ளார்.

இந்த விஷயத்தில் தனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. எனது நடவடிக்கைக்காக என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். அதை சந்திக்க தயார் என்று கூறி உள்ள ரூபா, தான் செய்த பணியை துணிச்சல் என்று கூற முடியாது, என் பணியைத்தான் செய்தேன் என்றும் ரூபா கூறி உள்ளார்.