பெங்களூர்,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சசிகலாவுக்கு சிறையில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அவ்வப்போது சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாகவும், அதற்கு ஆதாரமாக    சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியே ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட குழு விசாரணை நடத்த  கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். அதற்கான அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சிறையை ஆய்வுசெய்த டி.ஐ.ஜி ரூபா இதுகுறித்து பரபரப்பு கடித்ததை சிறைத்துறைக்கு அனுப்பினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை குழு வெளிப்படையான விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று  ரூபா கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா,  கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள்  பற்றி எழுப்பப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதன்படி, சசிகலா சொகுசு சிறை வாழ்க்கை  குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது..

அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் பல பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  அவர்களின் ஆய்வின் போது, சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து பெரும்பாலான கைதிகள் கூறியிருப்பதாகவும்,  பெங்களூரு பரப்பனஅக்ரஹரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடந்ததும் உண்மை தான் என்று கூறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை மற்றும் காவல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், இந்த விசாரணை குழு அறிக்கையை கர்நாடக அரசு வெளியிடுமா என்பது சந்தேகம் என்றும் மேலும் ஒரு தகவல்கள் கூறுகிறது.