சென்னை:
.தி.மு.க.வின் துணைப்பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் சசிகலா போட்டியிடப்போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா – சசிகலா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 18 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.   அவரை ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, தமிழக அரசை மறைமுகமாக இயக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. . அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்தி அரசை இயக்க கூடாது என்று பலவேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து சசிகலா நேரடி அரசியலில் இறங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக துணை பொதுச்செயலாளராக அவர் அறிவிக்கப்படப் போவதாகவும், தஞ்சாவூரில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில்  அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக அந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கும் ஆட்சிக்கும் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் வருவதால் இரண்டையும் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், “சசிகலா போட்டியிடுகிறார் என்றால், முதல்வர் ஆக்கப்படுவதற்காகத்தான் இருக்கும். ஆனால் அவர் மீதும் வழக்கு இருக்கிறது. ஆகவே இப்படி ஒரு ஐடியா அதிமுகவில் இல்லை” என்றும் சொல்லப்படுகிறது.