சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் சீராய்வு மனு! சசிகலா தாக்கல்

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் சசிகலா அன் கோவினர் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கனவே  உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்டவர்களில், முதல் குற்றவாளியாக கருதப்பட்டவர் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கை முடித்துக் கொள்வதாக தீர்ப்பு அளித்ததை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த தீர்ப்பு  கடந்த 1991ம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் தங்களை விடுவித்து அதை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும்,

எனவே, தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மறு சீராய்வு மனுக்களில் கூறி உள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.