ஜெ.- சசி கடன் பெற்று கார் வாங்கினார்கள் !

ஜெயலலிதாவும் சசிகலாவும் வங்கிக்கடன் பெற்று கார்கள் வாங்கியதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆராய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் பலரும் ஆஜராகி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆணையத்தில் ஐஒபி வங்கி மேலாளர் மகாலட்சுமி, மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூரபாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக வெளியிடப்பட்ட வீடியோ, அங்கு எடுக்கப்பட்டது தான்” என்றார். மேலும், கருவி ஒன்றை  ஜெயலலிதாவுக்கு  கொடுத்ததாகவும் அதன் மூலம் 15 நிமிடத்திற்கு ஒரு முறை அவரது சர்க்கரை அளவை கண்காணிக்க முடிந்தது என்றார். மேலும் உடல்பருமன் குறைக்க அறுவைசிகிச்சை செய்ய வலியுறுத்திய போது தான் உணவுமுறை மூலமே குறைத்து கொள்வதாக ஜெ கூறியதாக  தெரிவித்தார்

இதனை தொடர்ந்து மருத்துவர் சாந்தாராமிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்  2000ஆம் ஆண்டில் இருந்து தாம் ஜெயலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அதற்கு முன்பிருந்தே ஜெயலலிதாவிற்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் கூறினார். மேலும் அவரிடம் ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு இனிப்பு அதிகமாக வழங்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டதாகவும், குறிப்பிட்ட கலோரி அளவிற்குள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையெடுத்து ஐஓபி வங்கியின் மேலாளர் மகலாட்சுமிடம் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர், “ஜெயலலிதா பிறந்தநாளுக்கு சசிகலா கார் பரிசாக வாங்க வங்கியில் கடன் பெற்றார். அதை திரும்ப செலுத்திவிட்டார். அதேபோல ஜெயலலிதாவும் சசிகலாவின் பிறந்தநாளக்கு கார் பரிசு வழங்க கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்திவிட்டார். அதேபோல விவேக் அவர்களுக்காக வாங்கிய கல்விக்கடனும் அடைக்கப்பட்டுவிட்டது” என்றார்.