அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ராயப்பேட்டை தலைமைகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படங்கள் அகற்றப்பட்டன. கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டு் என்று ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் சசிகலா படத்தை அகற்றி அதிமுக தலைமை கழகத்தின் புனிதத்தை காக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் தெரிவித்தார்.

ஆனால் திண்டுக்கல் சீனிவாசன், “சசிகலா படத்தை அகற்ற முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சசிகலா பேனர்கள அகற்றப்பட்டுள்ளன.   அதற்கு பதிலாக, ஜெயலலிதா மட்டும் இருக்கும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

“அலுவலகத்தின் உள்ளே இருக்கும் சசிகலா படங்களும் இன்று அகற்றப்படும்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது.

இதிலிருந்து கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.  அதே நேரம் இதையும் நாடகம் என்று சொல்வோரும் இருக்கவே செய்கிறார்கள்.