பண மதிப்பிழப்பின்போது சசிகலா ரூ.168கோடிக்கு சொத்து வாங்கினார்! உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தகவல்

சென்னை:

நாடு முழுவதும் கடந்த 2106ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபோது, தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு முறைகேடாக பினாமி பெயரில் ரூ.168 கோடி அளவிலான சொத்துக்களை சசிகலா வாங்கிக்குவித்து உண்மை, அதற்கான ஆவணங்கள் உள்ளதாக வருமானவரித்துறை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி,  புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென அறிவித்தார். இதனால் பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகினர். கருப்பு பணத்தை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் ஜெயலலிதா உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.,

இந்த சமயத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன்னிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் கட்டுக்களைக் கொண்டு,  புதிதாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். இந்த விஷயம், அவரது வீடு உள்பட அவரது குடும்பத்தினர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டின்போது தெரிய வந்தது.

இந்த ரெய்டில், சசிகலா ரூ.1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இவற்றில் முக்கியமானது, புதுவையை சேர்ந்த பிரபல நகைக்கடையான லட்சுமி ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டலும் ஒன்று. இந்த ஓட்டலை வாங்க  சசிகலா தன்னிடம் இருந்த ரூ.148 கோடி செல்லாத நோட்டு பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதுபற்றி வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தனர். மேலும் சட்டப்படி அந்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்தது.

சசிகலா வாங்கியதாக கூறப்படும் ரிசார்ட்டின் எழில் தோற்றம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டல் இயக்குனர் நவீன் பாலாஜி மற்றும் பங்குதாரர்கள் 6 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, நாங்கள் சசிகலாவிடம் அந்த ஓட்டலை விற்பதற்கு ஒப்பந்தம் செய்து இருந்தோம். ஆனால், அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதை ரத்து செய்து விட்டார்கள். எனவே, அவர்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்தனர். இதன் காரணமாக ஓட்டல் விற்பனை இறுதி ஆகவில்லை என்று தெரிவித்து இருந்தது.

மேலும், இந்த ஓட்டல் விற்பனை தொடர்பாக சசிகலா தரப்பிடம் இருந்து ரூ.135.25 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை கொடுத்து, இதை மாற்ற முடியவில்லை என்றால், திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினர். இதில் ரூ.37 கோடியை எங்களால் மாற்ற முடியவில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும், ஏற்கனவே வருமானவரித்துறை நடத்திய விசாரணையின்போது  தெரிவித்து விட்டோ. அப்படி இருக்கும்போது, வருமானவரித்துறை எங்களது சொத்துக்களை முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் வருமானவரித்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.அதன்மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில்,  ரூ.168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதற்கு சசிகலா மற்றும் அவரது தரப்பில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் தனது பங்குகளை சசிகலா தரப்புக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இதற்கான பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டு விட்டார்கள்.

சசிகலா வாங்கியதாக கூறப்படும் ரிசார்ட்டின் எழில் தோற்றம்

எனவே, ஓட்டல் விற்பனை என்பது முடிந்து விட்டது. இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சோதனை நடத்திய போது, கண்டுபிடித்து இருக்கிறோம். நடந்த ஒப்பந்தங்களை மறைத்து முந்தைய ஓட்டல் பங்குதாரர்கள் தவறான தகவல்களை தருவதற்கு முயற்சிக்கிறார்கள். இது, பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம் என்பது உறுதியாகி உள்ளது.

எனவே, ஓட்டலை கைப்பற்றுவதற்கு பினாமி சொத்து சட்ட விதிகளின்படி உரிமை உள்ளது. எனவே ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அந்த ஓட்டல் நிறுவனம் மார்ச் 13-ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.