சிறையில் சசிகலா லஞ்சம்: எடப்பாடி வாய் திறக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின்

சென்னை,

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகார் குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா அன் கோவினர், சிறை அதிகாரி களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து,  உல்லாசமாக வாழ்ந்துவந்ததாக முன்னாள் சிறைஅதிகாரி டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பெங்களூர் சிறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சசிகலா சிறை, லஞ்சம்  தொடர்பான பிரச்சினையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மவுனமாக இருப்பது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில்,  முதலமைச்சர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பதிவில் பிரதமர் மோடி டெல்லியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்காமல், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களைச் சந்திப்பது வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.