ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 ஆண்டுகள் தண்டனையை முழுமையாக அனுபவித்துவிட்ட சசிகலா, நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் பாதி தண்டனை காலத்தை அனுபவித்தவர்களை விடுவிக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. இது தொடர்பான பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் அதில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக கேட்கப்பட்டபோது, சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்றும், ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிப்பதால் 4 ஆண்டுகள் முழுமையாக அவர் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கேரள சிறைத்துறை டிஜிபி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், “பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். பாதி தண்டனை காலத்தை கழித்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் ஊழல் வழக்கில் சிறை சென்று இருக்கும் சசிகளவிற்கு இது பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை டிஜிபி. கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் முன்பே ஒரு வழக்கில் உதாரணம் காட்டியுள்ளது. இதில் நன்னடத்தையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் வழக்கை கவனத்தில் கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி உடன் ஆலோசனை நடத்த உள்ளோம். சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். விரைவில் சசிகலா வெளியே வருவார். அதற்கான ஆலோசனை செய்து வருகிறோம். சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.