சென்னை

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ள சசிகலா அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார்.

கடந்த 1991-96 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்தை மீறி சொத்து சேர்த்தாக வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் சசிகலா அக்காள் மகன் சுதாகரன் ஆகிய நால்வருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 2014 ஆம் ஆண்டு நான்காண்டு சிறைத் தண்டனை வழங்கியது.

அதன் பிறகு கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டபோது 2015 ஆம் வருடம் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.   ஆனால் உச்சநீதிம்கன்றம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்தது.  ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கல் ரத்து செய்யப்பட்டன.  மற்ற மூவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சசிகலா தண்டனை முடிந்து விடுதலை ஆகி உள்ளார்.   அவர் சென்னைக்கு ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் திரும்பி வந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.   அதிமுகவில் தற்போது மீண்டும் சசிகலா இணையலாம் என பல ஊகங்கள் எழுந்துள்ளன.   ஆனால் சட்டப்படி ஊழல் அல்லது வேறு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தண்டனைக்குப் பிறகு 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவில் மட்டுமில்லாமல் ஆட்சியிலும் சசிகலாவின் பங்கு மறைமுகமாக இருந்து வந்தது.   அந்த அதிகாரங்களை அவர் மீண்டும் பெற முயலலாம் என ஒரு சில அதிமுகவினர் கூறுகின்றனர்.   முதல்வர் எடப்பாடி தம்மை சசிகலா முதல்வர் ஆக்கவில்லை எனவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுக பிரமுகர்களில் சிலர் சசிகலாவை வரவேற்றுப் பேசி உள்ளனர்.  அதில் ஒரு சிலர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆயினும் கட்சி மட்டத்தில் சசிகலாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆயினும் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத் தகக்தாகும்.   மத்திய அமலாக்கப் பிரிவு தொடுத்துள்ள மூன்று வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.  எனவே சசிகலா அரசியலில் தீவிரமானால் இந்த வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  மேலும் அதிமுக அரசும் மத்திய அரசுக்குப் பலவிதங்களில் துணை போவதால் மத்திய அரசு அதிமுகவுக்குத் துணை போகுமா அல்லது அதிமுக மத்திய பாஜக அரசை எதிர்த்தால் சசிகலாவை பாஜக பயன்படுத்திக் கொள்ளுமா எனப் பல கேள்விகள் உள்ளன.   விடைகளை எதிர்காலம் தான் சொல்ல முடியும்.