சசிகலா எதிர்பார்க்கும் அடுத்த “திக் திக்” தீர்ப்பு: மார்ச் 20!

--

டில்லி:

.தி.மு.க., பொது செயலராக சசிகலா பொறுப்பேற்றது தொடர்பான புகார் குறித்த முடிவு வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றார். பிறகு கட்சியின் ஓ.பி.எஸ் தலைமையில் பிளவு ஏற்பட்டது.

சசிகலா – தினகரன்

ஓ.பி.எஸ். அணி சார்பாக, மைத்ரேயன் எம்.பி., “அதிமுக கட்சி விதிப்படி, சசிகலா பொதுச்செயலாளரானது செல்லாது” என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

இது குறித்து சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  அதற்கு சசிகலா பதில் அளித்தார். பிறகு இது குறித்து ஓ.பி.எஸ். அணியின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் கேட்டது. அவர்கள் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதற்காக டில்லி சென்றுள்ள ஓ.பி.எஸ்., தலைமை  தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார். அவருடன் கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், செம்மலை, மைத்ரேயன் உள்ளிட்டோர் சென்றனர்.  சசிகலா மீதான புகார் தொடர்பாக தங்கள் தரப்பு தரப்பு வாதத்தை மனோஜ் பாண்டியன் எடுத்து வைத்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வரும் 20ம் தேதி தனது  முடிவை அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு சசிகலா மிகவும் எதிர்பார்க்கும் தீர்ப்பு  (முடிவு) இதுவாகும்.
“சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது அ.தி.மு.க. கட்சி விதிப்படி செல்லாது”  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டால், அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் பதவிக்கும் ஆபத்துதான்.

அதன் பிறகு இருவரின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே சசிகலா தரப்பினர், தேர்தல் ஆணையத்தின் முடிவை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

You may have missed