சசிகலா வருகைதந்து மாஸ் காட்டிவிடுவாரோ என்ற பயத்தில், அவசர அவசரமாக திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் மூடப்பட்டது.

சசிகலா நீண்ட ஆண்டுகள் வசித்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக்கப்பட்டு, அதுவும் அவசர அவசரமாக திறக்கப்பட்டு மூடப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் என்று அஞ்சி, அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். அது ராமாவரம் பகுதியிலுள்ள எம்ஜிஆர் நினைவு இல்லம்!

எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் விட்ட இந்த இடைவெளியை, சசிகலா தரப்பினர் அழகாக நிரப்பிவிட்டனர். பிப்ரவரி 8ம் தேதி காலையே, சசிகலா ராமாவரம் தோட்டம் செல்வார் என்று அறிவித்தார் டிடிவி தினகரன். எனவே, எடப்பாடி அரசால் அதற்குமேல் எதையும் செய்ய முடியவில்லை.

அதற்கு முன்னதாக, எடப்பாடி குழுவினர் நினைத்திருந்தால், அதிமுகவின் கார் பயணத்திற்கே தடை போட்டிருக்கலாம். அதிலும் கோட்டைவிட்டனர். இவர்கள் தடைபோட்ட கொடி விஷயத்தையும், சசிகலா தரப்பினர் வேறுவகையில் புத்திசாலித்தனமாக முறியடித்தனர்.

அரசியலில், இவர்களுக்கெல்லாம் டான்களாக இருந்தவர்கள் சசிகலா & கோ. எனவே, பாஜகவின் முழு தயவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அவர்கள், தங்களின் இடத்தை தக்க வைக்க வேண்டுமானால், இன்னும் அதிக சமயோஜித அறிவுடன் செயல்பட வேண்டியுள்ளது.