ஜெ.,வுக்கு சசி: தீபாவுக்கு ராஜா?

போயஸ்கார்டன் வாசலில் தீபா – தீபக் – மாதவன் – ராஜா ஆகியோரிடையே நடந்த காரசார வாக்குவாதத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.

கண்ணீர் மல்க  பேட்டி அளித்துக்கொண்டிருந்தார் தீபா. அவரது ஒரு பக்கம் கணவர் மாதவன்.. ற்றொரு பக்கம் டிரைவர் ராஜா நின்று கொண்டிருந்தனர்.

பேட்டிக்குப் பிறகு காரில் ஏற வந்த மாதவனை கடுமையாகப் பேசினார் தீபா.  அப்போது மாதவனைப் பார்த்து கையை உயர்த்தினார் தீபக். அதற்கு தீபா, “டேய்… என்னடா நீ மாதவனை பார்த்து கையை நீட்டுற என்று திட்டினார்.

அப்போது காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். பிறகு மாதவனை ஒருமையில் பேசிய காவலர்களை “என்னோட புருஷனை எப்படி நீ அப்படி சொல்லலாம்” என்று ஆவேசமாக பேசினார்.

அந்த நேரத்தில் டென்சன் ஆன டிரைவர் ராஜா,  தீபாவை காரில் ஏறு என்று ஒருமையில் சொன்னார்.

அதற்கு தீபா செல்லவில்லை. நீ போ… நான் சொல்றதை நீ கேளு என்றார். மாதவனின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இதையெல்லாம் மாதவன் தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்த டிரைவர் ராஜா, ஆபாச வார்த்தைகளினால் மாதவனை அர்ச்சித்தார். மேலும், “ டேய்… பணத்தை திருட்டிட்டு ஓடின நாய் நீ எதுக்கு இங்க வந்தே… செல்போன்ல ஏன் வீடியோ எடுக்கிற” என்று ஆபாசமாக திட்டினார்.

ஆனால் இப்போது தீபா டென்சன் ஆகவில்லை. “ஏய் ராஜா, நீ தேவையில்லாம பேசாதே” என்று லேசாக கண்டித்தார்.

இதுதான் அந்த வீடியோவை பார்த்தவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவரை இன்னொருவர் ஆபாசமாக ஏச… மனைவியோ மென்மையாக கண்டிக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டனர்.

தீபா – ரஜா

அந்த அளவுக்கு தீபாவிடம் செல்வாக்கு உள்ள இந்த டிரைவர் ராஜா யார்?

“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை” வட்டாரத்தில் விசாரித்தோம்.

அவர்கள், “இந்த டிரைவர் ராஜா, தீபா பேரவையின் பொருளாளர். இவர்தான் தீபாவை இயக்குகிறார்.  இரு மாதங்களுக்கு முன்பு வரை தீபாவின் தி.நகர் இல்லத்துக்கு முன்பு  அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தபடி இருப்பார்கள். ஆனால் இப்போது அங்கு எந்தத் தொண்டரும் வருவதில்லை.

இப்படி தீபா செல்வாக்கு இழக்கக் காரணம் இந்த ராஜாதான். இவர்தான் தீபாவுக்கு தவறான அட்வைஸ் கொடுத்து செல்வாக்கு இழக்க வைத்துவிட்டார்” என்றனர்.

தீபாவுக்கு நெருக்கமான வட்டாரம், இந்த ராஜா பற்றி தெரிவிப்பது என்ன?

”இந்த ராஜாவுக்கு திருச்சி மாவட்டம் முசிறிதான் சொந்த ஊர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருந்த முசிறபுத்தனின் அக்காள் மகன் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார் ராஜா.  இவரது குடும்பம் ( கச்சா) எண்ணெய் தொழில் செய்துவருவதால் “ஆயில்” ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்பத்தில் இவர் தீபாவின் அண்ணன் தீபக்குக்குத்தான் பழக்கம். அப்படியே தீபாவும் அறிமுகம் ஆக, தீபாவுக்கு டிரைவராக இருந்தார். பிறகு ஆலோசகர் ஆனார். இப்போது இவர் சொல்வதைத்தான் தீபா கேட்கிறார்.

தீபா பேரவை துவங்கியபோது, அரசியலில் சீனியர்கள், பண பலம் படைத்தவர்கள் பலர் பேரவையில் இணைய வந்தனர். அவர்களை அண்டவிடாமல் செய்தவர் ராஜாதான். காரணம், தீபாவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்துவிடக்கூடாது என்பதால்தான்.

பேரவையில் போஸ்டிங் போட பலரிடம் பணம் வாங்கி இப்போது கோடியில் புரள்கிறார் ராஜா. இப்போது ராஜாவின் உறவினர்களான முருகன், சுரேஷ், பாலாஜி, விக்கி ஆகிோயர்தான் தீபாவைச் சுற்றி இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவால் உடன்பிறவா தோழி என்று அறிவிக்கப்பட்ட சசிகலாவால்தான் அவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டது. அதே போலத்தான், தீபாவுக்கு ராஜாவால் கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்று புகார் படலம் வாசித்தனர்.

இது குறித்து ராஜாவிடம் கேட்டோம். அவர், “தீபா, தீபக், நான் எல்லோரும் பால்ய சிநேகிதர்கள். ஒன்றாகத்தான் பள்ளியில் படித்தோம்.  இரு தரப்பினரின் குடும்பத்தினரும் நன்கு அறிமுகம்.

தீபா பேரவையில் எல்லாமே தீபாவின் உத்தரவின்படிதான் நடக்கிறது. என்னை பொருளாளராகவும் எனது மனைவி சரண்யாவை பொதுச்செயலாளராகவும் அறிவித்தது தீபாதான். அவர் சொல்வததைத்தான் நாங்கள் கேட்கிறோம் நான் சொல்லி கட்சி பொறுப்புக்கு ஆட்களை நியமிக்கிறார் என்பதோ நான் அதற்காக பணம் வாங்குகிறேன் என்பதோ உண்மையல்ல” என்றார்.

மேலும், “சிறு வயதில் இருந்தே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில்தான் பரஸ்பரம் வா போ என்று பேசுகிறோம். முதலில் அவர் எனக்கு தோழி. பிறகுதான் கட்சி தலைவி” என்றார் ராஜா.