சென்னை:
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
இன்று காலை முதலே போயஸ் தோட்டம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போயஸ் தோட்டம் நோக்கி வந்த வண்ணம் உள்ளளனர். நடைபெற்று வரும் நிகழ்வுகள்  அனைத்தும் மர்மமாகவே உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ந்தேதி இரவு காலமானார். முன்னதாக இரண்டு மாதத்திற்கும் மேல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அதைத்தொடர்ந்து அதிமுகவின் மூத்த அமைச்சர் ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றார். தொடர்ந்து அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச்செயலாளராக்கி அதிமுக வுக்கு தலைமையேற்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இன்று காலை தமிழக முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வருகை தந்தனர். கட்சியின் மூத்த தலைவர்கள் மதுசூதனன், தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் போயஸ் இல்லத்துக்கு வந்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுகவின் பொதுச்செய லாளராக சசிகலா இன்று தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்தார்போல், அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் இன்று காலை கட்சியின் தலைமை அலுவல கத்துக்கு வரச்சொல்லியிருந்தனர்.  தலைமை அலுவலகத்திலிருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்து மூலம் போயஸ் கார்டன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைந்து 11-வது நாளுக்கு பின் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 11வது நாள்  காரியம் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அதற்காக தான் அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்த மாத இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட்டி, பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று பொன்னையன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போயஸ் தோட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்று யாருக்கும் தெரியாது…  அதேபோலத்தான் தற்போதும் நடைபெற்று வருகிறது… எல்லாம் மர்மமாகவே இருக்கிறது என்று புலம்பினார், ஜெ. வீட்டை பார்வையிட வந்தவர் ஒருவர்.