வேறு கட்சியில் உள்ளதால் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கம் : ஜெயகுமார்

சென்னை

சிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயளாளராக இருப்பதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மாநிலக் கல்லூரியின் 178 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா\நாயுடு, தமிழக அமைச்சர்கள் அன்பழகன், மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.

அப்போது அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “அதிமுகவின கட்சி விதிகளின் படி வேறொரு கட்சியில் உள்ளவர் அதிமுகவில் தொடரமுடியாது. சசிகலா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர். அத்துடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கிறார்.

அதனால் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார். அந்த அடிப்படையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்ட விதிகள் சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.