சசிகலாவுக்கு சிறையில் சொகுசா? ஆச்சார்யா கடும் எதிர்ப்பு!

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பொழுதுபோக்கிற்காக டி.வி., மின்விசிறி, நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை சூப்பரிடண்ட் கிருஷ்ணகுமார் தெரிவித்திருந்தார்.

அவர் வருமான வரி செலுத்துவதாகவும், அதன் காரணமாக வசதிகள் வேண்டியும்  கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது  என்று கூறினார்.

இதற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

 

தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தவறு செய்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தினால் அதற்கு பெயர் தண்டனை ஆகாது என்று கடுமையாக சாடினார்.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனார் அது அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது.

சசிகலா நினைத்தால் தமிழக சிறைக்கு மாற்றலாகி விடமுடியாது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

மேலும்,  சிறை மாற்றம் கோரி குற்றவாளிகள் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால், அதற்கு கர்நாடக அரசின் சார்பில் கண்டிப்பாக ஆட்சேபணை தெரிவித்து  மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

வழக்கறிஞர் ஆச்சார்யாவின் இந்த அதிரடி பேட்டி சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.