சென்னை:

தமிழக சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி அமைக்க உரிமை கோர சசிகலா முடிவு செய்திருந்தார்.

 

ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்ததால் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதற்கிடையில் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். நிர்பந்தம் செய்யப்பட்டதால் ராஜினாமா செய்தேன் என்று அறிவித்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். இது சசிகலா தரப்புக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

சசிகலா மீண்டும் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். இறுதியில் 128 எம்எல்ஏக்கள் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 5 பேர் பன்னீர்செல்வத்துடன் சென்றுவிட்டனர். 128 எம்எல்ஏ.க்களையும் சொகுசு பஸ்களில் அழைத்துச் சென்று பாதுகாப்பு மிகுந்த இடத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தார். முதலில் பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கு கவர்னரை ச ந்தித்து தனது தரப்பு விளக்கத்தை 20 நிமிடங்களில் அளித்தார். ‘‘எம்எல்ஏ.க்கள் சுதந்திரமாக முடிவெடுக்கவில்லை’’ என்று பன்னீர்செல்வம் கவர்னரிடம் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கு கவர்னர் நேரம் ஒதுக்கியிருந்தார். இதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட அவர், இரவு 7 மணி அளவில் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா வந்தார்.

கடிதத்தை நினைவிடத்தில் வைத்து வணங்கினார். அவருடன் அமைச்சர்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய பிறகு சசிகலா கவர்னரை சந்திக்க புறப்பட்டு ராஜ்பவன் சென்றார். டிடிவி தினகரன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, ஜெய்குமார் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். கவர்னரை சந்தித்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரினார். கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் பெற்றுக் கொண்டார்.

சுமார் அரை மணி நேரம் வரை இந்த சந்திப்பு நீடித்தது. சசிகலா தனது தரப்பு நியாயங்களை எடுத்து கூறியதால் சந்திப்பு நீடித்தது. சந்திப்பை முடித்துக் கொண்டு சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு திரும்பினார். இதை தொடர்ந்து இன்று இரவுக்குள் கவர்னர் தனது முடிவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் என்ன சொல்ல போகிறார் என்று நாடே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.