நாளை கவர்னரை சந்திக்கிறார் சசிகலா! நாளை மறுநாள் பதவியேற்பு!

சென்னை,

நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஓபிஎஸ்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், நாளை அதிமுக சட்டமன்றகுழு தலைவர் சசிகலா கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். அதையடுத்து  நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்கிறார்.

அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகதான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான  கடிதம் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியல் கொடுப்பார் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுப்பார். வரும் வியாழக்கிழமை (9ந்தேதி) சசிகலா பதவி ஏற்கிறார். அதற்காக நூற்றாண்டு விழா மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா ஆகியோர் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்தனர்.  அப்போது சசிகலாவுடன் பதவி ஏற்பு விழா குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் கவர்னர் இன்னும் சென்னை திரும்பவில்லை. இன்று இரவோ அல்லது நாளையோதான் சென்னை வருகிறார்.

எனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியே செல்லாதவாறு சென்னையிலேயே தங்கி இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.