டில்லி:
முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.  அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா.  கடந்த சனிக்கிழமை டில்லி விமான நிலையத்தில்  திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.   இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா புஷ்பாவை போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்து முதல்வர் ஜெயலலிதா விசாரித்ததாக தகவல் வெளியானது.
a
அடுத்த நாள் ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்த சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது தலைவர் ஜெயலலிதா தன்னை அடித்து விட்டதாகவும், தன்னை எம்.பி பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி அழுது புலம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சசிகலாபுஷ்பா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. தமிழகத்துக்கு வர அச்சமாக இருப்பதாகக்கூறி, டில்லியில் உள்ள தனது இல்லத்தில்தான் சசிகலா புஷ்பா இருந்தார். அந்த வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அங்கு சென்ற செய்தியாளர்களிடம், “சசிகலாபுஷ்பா இல்லை” என்று மட்டும் வீட்டு பாதுகாவலர்கள் கூறினார்கள்.
சசிகலாபுஷ்பாவுக்கு சிங்கப்பூரில் நண்பர்கள் உண்டு என்றும், ஆகவே அங்கு சென்றிருக்கலாம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
அதே நேரம், இன்னொரு தகவலும் உலவுகிறது.
“எப்படியாவது சசிகலா புஷ்பாவிடம் பேசி ராஜினாமா செய்ய வையுங்கள்” என்று அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதை அறிந்த சசிகலாபுஷ்பா, வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தியை பரவவிட்டுவிட்டு, தனது டில்லி வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடும்” என்கிறது அந்த இன்னொரு தகவல்.