ஆட்சியைக் கலைக்க தயாராகிறாரா சின்னம்மா?

நியூஸ்பாண்ட்:

நியூஸ்பாண்ட் அலுவலகத்துக்கு வருவதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்ததும், அவசர அவசரமாக, ஒரு பேனர் செய்து அனுப்பினோம்.

அலுவலகத்துக்கு வந்தவர், கடு கடு முகத்துடன், “நிகழ்வுகளின் நாயகனே.. நியூஸ்பாண்டாரே.. வருக, வருக” என்று  டிஜிட்டல் பேனர் அனுப்பியிருக்கிறீர்கள்.. கிண்டலா” என்றார்.

பதறிப்போன நாம், “அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை.. சும்மா ஒரு ஜாலிக்கு…” என்று இழுத்தோம்.

“பக்”கென சிரித்த நியூஸ்பாண்ட், “தெரியுமய்யா, உமது கிண்டல்” என்று சொல்லிவிட்டு, செய்திக்குள் புகுந்தார்:

“சமாதியே அதிரும்படி சத்தியம் செய்த சின்னம்மா.. நேற்று சிறையே  இடியும்படி சத்தம்போட்டிருக்கிறார்..!”

“அப்படியா..என்ன காரணமாம்…?”

”தான் பார்த்து முதல்வர் பதவியை போட்டுக்கொடுத்த (!) பழனியார், இப்போது தன் கையை மீறி நடக்கிறாரே  என்பதுதான் சின்னம்மாவின் ஆத்திரத்துக்குக் காரணம்!”

“ஓ…  விரிவாகச் சொல்லும்”

“சொல்கிறேன். சின்னம்மா சிறையில் இருந்தாலும், அவரது ரத்த பந்தங்களில் கடைசி “கரன்” காரரிடம் “கமிஷன்”  அளித்துவிட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது.   ஆரம்பத்தில் கொஞ்ச நாள் இது சரிவர நடந்தது. ஆனால் வெதுவிரைவிலேயே , உரிய தொகை, உரிய இடத்துக்கு அனுப்பபடுவது நிறுத்தப்பட்டுவிட்டதாம்.

இது குறித்து சின்னம்மாவின் உத்திரவின் பேரில்  கரன் காரர் விசாரிக்க, அதற்கு உரிய பதில் வரவில்லையாம்.

“இவர்களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்” என்று தனக்கு நெருக்கமானவர்களை விட்டு விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

கிடைத்த விபரம் அதிர வைத்ததாம்!”

“அப்படி என்ன விபரம்?”

“பொறும்.. சொல்லத்தானே போகிறேன்! இங்கே ஆளும் பிரமுகருக்கு, மத்தியிலிருந்து ஒரு தகவல் சொல்லப்பட்டதாம். அதாவது, “உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருப்போம். நீங்கள் சி்ன்னம்மா வகையறாவுக்கு அஞ்சத் தேவையில்லை” என்பதுதான் அந்த தகவல். இதையடுத்துதான், மூலஸ்தான முதல்வர் முதல், அனைவருமே  கப்பம் கட்டுவதை நிறுத்திவிட்டார்களாம்!”

“ஓ..”

“இதுதான் சிறையில் சின்னம்மா, ருத்ர தாண்டவம் ஆடியதற்குக் காரணமாம்!” என்ற நியூஸ்பாண்ட், “இன்னொரு காரணமும் இருக்கிறது. அதையும் சொல்லி விடுகிறேன்” என்றார்.

மேசையில் நாம் வைத்த ஜில் ஜில் ஜிகர்தண்டாவை எடுத்து ஒரு மிடறு ரசித்து குடிக்குடித்தவர், மீண்டும் விசயத்துக்கு வந்தார்:

“தோட்ட இல்லத்துக்குள்ளேயே அதிகாரப்போட்டி நடந்துவருகிறது. இளமையான அரசியின் மூத்த மகளான ப்ரியமானவர் தற்போது தலையெடுத்து வருகிறார். தோட்டத்தில் இருந்த, இருக்கும் பெரும் சொத்துக்கள் குறித்து இவருக்குத்தான் தெரியுமாம். இதையடுத்து, கட்சித் தலைமைப் பதிவிக்கு வர இவரு திட்டமிடுகிறாராம்.

இதுவும் சின்னம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு காரணங்களால்தான் அவருக்கு ஆத்திரம்” என்றார் நியூஸ்பாண்ட்.

நாம், “சி்ன்னம்மாவின் ஆத்திரம் ஏகப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துமே..” என்றோம்.

“ஆமாம்…  இனியும் பொறுப்பதில்லை என்ற எண்ணத்துக்கு வந்திருக்கிறாராம். சின்னம்மா. தற்போதைய ஆட்சியினால் தனக்கு எந்தவித பலனும் இல்லை என்கிற போது எதற்கு இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆகவே தனக்கு ஆதரவாக… இன்னமும்… இருக்கும் பதினான்கு பேரை வைத்து ஆட்சிக்கு சிக்கல் கொடுக்க நினைக்கிறாராம்.

தனது எண்ணத்தையும், தனது விசுவாசிகளான சில எம்.எல்.ஏக்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்.ட

“அதாவது.. ஆட்சி கலைப்புக்கு திட்டமிடுகிறார்..”

“ம்.. மேலும் கேளும். இதில் இதில் இன்னொரு அதிர்ச்சி இருக்கிறது.

“சின்னம்மா தரப்பில் இருந்து, இப்போடியோர் அஜண்டா இருக்கிறது. எங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தீர்களானால், எங்களால் எந்த பிரச்சினையும் வராது என்று மூலவரிடம் தெரிவித்திருக்கிறார்கள் இவர்கள்!”

“அட…”

“இதையடுத்து அவர்களில் சிலருக்கு பதவியும், வேறு சிலருக்கு கூடுதல் கவனிப்புகளும் அளிக்க திட்டமிட்டிருக்கிறார் மூலவர்!”

“ம்ஹூம்.. எல்லாம் நம்ம பணம்!”