பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார்.

கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். இதற்கு கர்நாடக போலீஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்திக்கிறார்கள். அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெறுகிறார்கள். அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு, சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு அவருக்கு சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும். பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை (வியாழக்கிழமை) சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வார காலம் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூருவிலேயே ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால், சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படுகிறது. இளவரசியும் சசிகலா உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.