சென்னை,

சிகலா குடும்பத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் மூத்த  அமைச்சர்களான தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள்  பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையப் போவதாக சில தினங்களாக தகவல் வெளியான நிலையில், அழைப்பு விடுத்தால் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பன்னீர் செல்வம் கூறினார்.

இதனையடுத்து நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை.

ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், இந்த கூட்டத்தில் இரு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒன்று, இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்ததாகும்.

இரண்டாவது இரு அணிகளும் இணைவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துகளை வரவேற்கிறன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.