பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து குவித்த சசிகலா: ஹைகோர்ட்டில் வருமானவரித்துறை அறிக்கை

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, சசிகலா சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை  அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

சொத்துக்குவிப்பில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்த சூழ்நிலையில், அவர் குவித்த சொத்துகள் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அதில் பல முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

பணமதிப்பிழப்பு தருணத்தில் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். சுற்றுலா விடுதி, 2  வணிக வளாகங்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், சர்க்கரை ஆலை, காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கியுள்ளார் என்று வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த சொத்துகளின் மதிப்புகள் பல நூறு கோடி ரூபாய்  மதிப்புள்ளவை என்றும் அதில் கூறியுள்ளது. 2016ம் ஆண்டு வரை பல நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த அவர், அதன் பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு உரிமைதாரராக மாறியிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.