சென்னை:

பெரியார் குறித்து ரஜனிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள  டிடிவி தினகரன், சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேச்சு சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது,

தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். பெரியாரைப்பற்றி பேசும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களை நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது, இது கண்டனத்துக்கு உரியது என்றார்.

தொடர்ந்து எடப்பாடி ஆட்சி குறித்து விமர்சித்தவர்,  தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடக்கவில்லை. கம்பெனிதான் நடை பெற்று வருகிறது என்று, இந்தஆட்சியை மக்கள், மக்களாட்சியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த ஆட்சியில், பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சசிகலா குறித்து தேவையற்ற வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர், அது சரியல்ல, சசிகலா  சிறையில் இருந்து வெளியே வருவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறையில் இருந்து சசிகலா  வெளியே வருவார் என்று தெரிவித்தார்.

அதிமுகவினர் சில கூறுவதுபோல, நானோ, சசிகலாவோ  ஒருபோதும் துரோகிகளோடு இணைய மாட்டோம், அதற்கான வாய்ப்பே இல்லை  என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.