பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக, பெங்களூரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறிப்பிட்டபடி வரும் 27ந்தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என தகவல் வெளியாகி உள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில்  4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறை தண்டனைக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து,  ஜனவரி 27ந்தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த வாரம்  உடல்நலம் பாதிக்கப்பட்டது. நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நிமோனியா காய்ச்சலும்  இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து விட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், சசிகலா மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, வழக்கமான முறைப்படி வரும் 27ந்தேதி விடுதலை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சிறை கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், அதற்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும்,  ஜனவரி 27 இல் மருத்துவமனையில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று சிறைத்துறை முறையாக விடுவிக்க உள்ளதாக கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.