சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளது : விசாரணை அறிக்கை தகவல்

பெங்களூரு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளதை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவருக்காக சிறையில் சலுகை மீறல் நடந்தததாக காவல்துறை அதிகாரி (டிஐஜி) ரூபா புகார் தெரிவித்தார். அதன் பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

ரூபாவின் புகார் குறித்டு விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் இன்று வெளியாகி உல்ளது. அந்த விசாரணை அறிக்கையில், “சசிகலாவுக்காக பரப்பன அக்ரஹாரா சிறையில் விதி மீறல் நடந்துள்ளது உண்மையே. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறை விதிகளின் படி பெண் கைதிகளுக்கு ஒரு அறைக்கு 4 பேர் வசிப்பது வழக்கமாகும். சசிகலாவுக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டதால் ஒரே அறையில் 4க்கு மேற்பட்ட பெண்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சசிகலாவுக்கு தனியே உணவு சமைத்து சாப்பிட குக்கர் உள்ளிட்டவைகள் இருந்ததாக ரூபா புகார் அளித்திருந்தார்.

விசாரணையின் போது சசிகலாவின் அறையில் குக்கர் உள்ளிட்ட எந்த ஒரு சமையல் உபகரணமும் கிடைக்கவில்லை. ஆயினும் சமையல் மஞ்சள் பொடி அவர் அறையில் கிடைத்துள்ளது. அதனால் அவருக்கு தனியே சமையல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு சிறை விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சசிகலாவும் அவர் உறவினர் இளவரசியும் சிறை உடைகளை அணியாமல் சொந்த உடைகளை அணிய சட்ட விரோதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை சந்திப்பதிலும் சசிகலாவுக்காக பலமுறை விதி மீறல் நடந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.