சென்னை:

“தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார். அதோடு, உடனடியாக அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை. . அவர் ஏற்கனவே எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் கட்சியின் பழைய உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சரியாக செயல்படவில்லை, மக்கள் பணிகள் முடங்கியுள்ளன. இந்தநிலையில் தற்போது அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாமல் அரசு எந்திரம் செயல்படாமல் உள்ளது. ஆளுநர் காலதாமதம் செய்வதன் பின்னணியில் மத்திய அமைச்சர்கள் இருவர் இருப்பதாக  பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிய தெரிவித்துள்ளார்.

ஆகவே,  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காலதாமதப்படுத்தாமல் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களிடம் ஆளுநர் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

மேலும்,”கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றும் முயற்சியில் தமிழக காவல்துறை ஈடுபடக்கூடாது. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திர உரிமை. அதேநேரம், கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

சசிகலாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது குறித்து,”இந்தத் தீர்ப்பு சட்டப்படி நடந்துள்ளது. இதில் கருத்து கூற ஏதும் இல்லை. இந்த தண்டனையில் இருந்து ஜெயலலிதாவை கடவுள் காப்பாற்றியுள்ளார்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.