பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா,  உடல்நலமில்லாமல் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க விரும்புவதாக கூறி, 15 நாட்கள் பரோல் கேட்டு கடந்த திங்கட்கிழமை சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார்.

அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், அவரது பரோல் விண்ணப்பத்தை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்  வந்துள்ளது.

பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளபடி அவரது கணவர் உடல்நிலை குறித்து தமிழக போலீசாரிடம் தொடர்புகொண்டு விவரம் பெற கர்நாடக சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் அறிக்கை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நட்ராஜனின் உடல்நிலை குறித்து தகவல் கேட்டு தமிழ்நாடு காவல்தறைக்கு கடிதம் அனுப்பி விவரம் கேட்க முடிவு செய்துள்ளதாகவும்,

அவருக்கு பரோல் வழங்கினால், அவர் பெங்களூருவை விட்டு வெளியேறி தமிழ்நாட்டை அடைந்ததும், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் தமிழக காவல்துறையினரின் கருத்தை கேட்கும் என்றும் சிறைத்துறை தகவல்கள் கூறுகின்றன.

எனவே, சசிகலா பரோல் மனுமீது ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அவரது பரோல் மனு இப்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

தமிழக காவல்துறையினரின் கடிதம் கிடைத்தபிறகே, சசிகலாவின்  பரோல் குறித்து முடிவு செய்யப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.