உச்சநீதிமன்றத்தில் சசிகலா அதிரடி கோரிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு அதிரடி கோரிக்கை வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.  பெங்களூரு தனி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தண்டனை அளிக்கப்பட்டு தீர்ப்பாகியது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு அவர்களுககு விடுதலை கிடைத்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. அங்கு குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தண்டனையாகி தீர்ப்பானது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தார். மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தண்டனைக்கு எதிராக சசிகலா உள்ளிட்ட மூவரும்  உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் (Open Court) நடத்த வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நடந்த காலகட்டத்தில் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஜெ – சசி தரப்பு வழக்கை இழுத்தடித்து வந்தது. நீதிபதிகளே இது குறித்து தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிவர்கள், தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்திருக்கிறார்கள்.

“ஒரு வழக்கை எப்படி எல்லாம் இழுத்தடிக்க முடியும் என்பதற்கு ஜெ – சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சிறந்த உதாரணம்” என்று சட்ட நிபுணர்கள் பலர் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரியிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.