சென்ன‍ை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணமும், சசிகலாவின் உடல்நலக்குறைவும் சில அரசியல் விமர்சகர்களால் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர், அரசுப் பயணம் என்ற பெயரில் திடீரென்று டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி. அங்கு அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது சசிகலா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முதன்முதலாக வெளிப்படையாக பதிலளித்தார். அவர் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அவர் அதிமுகவிலேயே இல்லை என்றும் பதிலளித்தார். தினகரன் குறித்தும் விமர்சனம் செய்தார்.

பாஜக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட தைரியத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு பேசுவதாக கூறப்பட்டது. அதேசமயம், சிறை மீண்டுவரும் சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைந்துகொண்டு, பழனிச்சாமியை தனிமைப்படுத்துவார் என்றும் ஒரு கருத்து உலவியது.

இந்நிலையில், சிறையிலிருந்து விடுதலையாக சில நாட்களே இருக்கும் நிலையில், சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு என்று அறிவித்துள்ளார்கள். கொரோனா தொற்று இல்லை என்று கூறியபின்னர், தற்போது தொற்று உள்ளதாக உறுதிபடுத்துகின்றனர். அவருக்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும், அவருக்கான சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவ்வளவு நாட்கள் கழித்து, இப்போது திடீரென சசிகலாவின் விஷயத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.