அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம்- சசிகாந்த் செந்தில்

சென்னை:

றுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம் என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள், சஞ்சய்தத், சிரிவெல பிராசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், எம்.பி. ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். மாநாடை தொடர்ந்து, ஏர்கலப்பை யாத்திரை துவக்க விழா மாநாடு நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சசிகாந்த் செந்தில், “பணியில் சேரும்போது விவசாயிகள்தான் நம்மை வாழ வைக்கிறார்கள் என்று எண்ணினேன். ஆனால், விவசாயிகளை பாதுகாக்க மாநாட்டில் பேசுவேன் என எண்ணவில்லை. எனக்கு ஏற்பட்ட அச்சத்தில் தான் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்தேன். இளைஞர்கள் வருங்காலத்தில் என்னை போல் படிக்காமல், சாலையில் சண்டை போடும் நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கார்ப்பிரேட்களின் நண்பன் மோடி என சொல்கிறார்கள், அப்படி இல்லை, அம்பானி, அதானி இருவர் தான் மோடிக்கு நண்பர்கள். கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி மக்களை போராட விட முடியாமல் தடுத்து, 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எந்த பாதுகாப்பும் இல்லை. நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். பதுக்கலை இந்த வேளாண் சட்டங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. அம்பானி, அதானிக்காகவே இந்த வேளாண் சட்டங்கள். இந்த சட்டங்களை பற்றி அனைவரிடமும் சொல்லி எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும். சமுதாயத்தை மாற்றி எழுதப்போகும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். பாஜகவை தமிழக மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அவர்கள் அறுபடை வீட்டிற்கு போகட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு போகலாம்” எனக் கூறினார்.