மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் சசி தரூர்

டில்லி:

த்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்று அறிக்கை வந்ததை அடுத்து அதுகுறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில், சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், “சசி தரூர் ஒரு கொலை குற்றம் சாட்டப்பட்டவர்…” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த ட்விட்டர் பதிவை நீக்க வேண்டும் என்றும், இந்தக் கருத்தை தெரிவித்தமைக்காக 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத்துக்கு சசி தரூர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அவர் அதற்கு பதில் அளிக்காத நிலையில் சசி தரூர் தற்போது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத்தின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், “அவரது ட்விட்டர் பதிவை நீக்குவதற்கோ அல்லது அதுகுறித்து மன்னிப்பு கேட்பதற்கோ எதுவும் இல்லை… சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தீர்ப்பு எப்படி வரும் என்று யாரும் கணிக்க முடியாது. அப்படி இருக்கையில் சசி தரூர் குறித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டதன் மூலமாக அவருக்கு அவதூறு ஏற்படுத்தினார் என்று ரவிசங்கர் பிரசாத்தை குற்றம்சாட்ட முடியாது. சுனந்தா மரண வழக்கில் தொடர்புடையவர் என்றுதான் அவர் கூறியிருக்கிறார்,” என்று தெரிவித்தார்.