மீனவர்களின் பாதுகாப்புக்காக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் சாட்டிலைட் போன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள், 200 நாட்டிக்கல் மைல் தாண்டி ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி தொழில் செய்வார்கள். அவர்கள் அவ்வாறு செல்லும்போது, புயல் எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வழங்கும். அதற்காக, இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஒரு குழுவுக்கு 2 சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சாட்டிலைட் போன் ஒன்றின் விலை ரூ.1 லட்சம்.

சாட்டிலைட் போன்கள் மூலமாக வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் தகவல்களால், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுவர். இதன்மூலம் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறையை இன்று திறந்துவைத்துள்ளோம்.

அதன்மூலம், தமிழகத்தில் உள்ள எல்லா மீன்பிடித் துறைமுகங்களுடனும் தொடர்புகொள்ள முடியும். இந்த நவீன தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். மேலும், www.tnfisheries.gov.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். அதில், மீனவர்கள் குறித்த எல்லா விதமான தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்,” என்று தெரிவித்தார்.