தூத்துக்குடி:
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும், அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பான முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசாரணை கைதி மரணம் தொடர்பான தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அப்போது இருந்து உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார், தாக்கியதில், விசாரணை கைதி இறந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் மற்றும் மக்கள் தீவிரமாக போராடியதால், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ ஸ்ரீகுமார் மீது, இந்திய தண்டனை சட்டம் 301, 302, 342 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.