காவல்துறையினரால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன! நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

மதுரை: காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததாக நீதிமன்றத்தில்  சிபிஐ  தகவல் தெரிவித்து உள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 10  காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள காவலர்கள்  முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கு எதிர்ப்ப தெரிவித்த சிபிஐ, பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,  சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்றும், அவர் களின் உடலில்  ஏற்பட்ட  ரத்தக்கசிவே, உயிரிழப்பு காரணம், ஜெயராஜ்,பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன. இதில், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங் களிலும் காயங்கள் இருந்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,  வழக்கு தொடர்பாக  ஏற்கனவே சிபிசிஐடி போலீசார்  60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது. சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

You may have missed